‘தங்கம்’(1995) படத்தின் மூலம் ஆவணப்பட உலகில் தனித்து அடையாளம் காணப்பட்டவர் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக்கல்வியைப் பயிற்றுவிக்கும் இணைப்பேராசிரியராகத் தற்போது பணியாற்றிவருகிறார். பத்துக்கும் அதிகமான இவரது ஆவணப்படங்கள், சர்வதேச பட விழாக்களில் திரையிடத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு, பல விருதுகளையும் பெற்றுள்ளன.
ஆவணப்படங்களை ‘நியூஸ் ரீல்’ என்ற புரிதலுடன் புறந்தள்ளும், தமிழ், இந்தியச் சூழலில், அவற்றை யதார்த்த அழகியலுடன் முன்வைத்துப் பார்வையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் கலை வடிவமாக மாற்றிக்காட்டிய சுயாதீனத் திரைப் படைப்பாளி இவர். திரைப்படம் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் இவரது பங்களிப்பைக் கவுரவிக்கும்விதமாக 2017-ம் ஆண்டுக்கான ‘லெனின் விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காகச் சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
திருநெல்வேலியைச் சேர்ந்த நீங்கள் மும்பையில் படித்து வளர்ந்திருக்கிறீர்களே?
அப்பாதான் அதற்குக் காரணம். அவர் ஒரு சிறு விவசாயி. சிறு வியாபாரி. நாசிக் சென்று வெங்காயம், உருளைக் கிழங்கு, நவதானியங்களை வாங்கி இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சிறிய அளவில் அனுப்பிப் பொருளீட்டியவர். வியாபாரம், தொழில் நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லும் குடும்பத் தலைவர்கள் எதற்கு வம்பென்று குடும்பத்தை ஊரிலேயே விட்டுச் சென்றுவிடுவதுதான் வழக்கம்.
ஆனால் அப்பா எதன் பொருட்டும் குடும்பத்தைப் பிரிய விரும்பாதவராக இருந்திருக்கிறார். அவ்வளவு அன்பு மயமானவர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உறவினர்கள், நண்பர்கள் எங்களின் சின்ன வாடகை வீட்டில் வந்து குழுமிவிடுவார்கள். அவர்களுக்குக் கேழ்வரகு தோசையிலிருந்து விதவிதமான பாரம்பரிய உணவுகளை அம்மா சளைக்காமல் செய்துகொடுத்துச் சந்தோஷப்படுத்துவார்.
மனங்கோணாத விருந்தோம்பலில் எப்போதும் எங்கள் வீடு மூழ்கியிருக்கும். நான் பிறந்ததும் மும்பையில்தான். பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்புவரை அங்கேதான்.
நாங்கள் குடியிருந்த மும்பையின் முலுண்ட் பகுதி அன்று புறநகர். அங்கே வெறும் 200 சதுர அடி வீட்டில் அப்பா, அம்மாவுடன் நான், என் சகோதரி, இரண்டு அண்ணன்கள் என வளர்ந்திருக்கிறோம். அது ஒரு காலகட்டத்தின் பயிற்சி என்றே சொல்லுவேன். அந்தப் பயிற்சி மிகக் குறைந்த வசதிகளை வைத்துக்கொண்டு ஆவணப்படம் எடுக்க எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
மும்மை வாசம்தான் நீங்கள் பூனா திரைப்படக் கல்லூரியிலும் சேரக் காரணமாக அமைந்ததா, அங்கே கற்கும் சூழல் எப்படியிருந்தது?
என் அண்ணன் மாணிக்கவாசகம்தான் முக்கியக் காரணம். சிவில் இன்ஜினீயராக இருந்த அவர்தான் பூனா திரைப்படக் கல்லூரி குறித்து எனக்கு எடுத்துச்சொன்னார். 1976 முதல் 1981 வரை ஐந்து ஆண்டுகள் அங்கே திரைப்பட இயக்கம் பயின்றேன். திரைப்படம் குறித்த மிகப் பெரிய திறப்பை எனக்கு பூனா இன்ஸ்டிடியூட் அளித்தது. எங்கள் பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு வெகு அருகிலேயே தேசிய திரைப்படக் காப்பகம் அமைந்திருந்தது.
இன்றைய டி.வி.டி, இணையம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்கள் அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. சத்யஜித் ராய், அகிரா குரோசவா, தார்கோவ்ஸ்கி, லூயி புனுவல், பிரெஸ்ஸோன் உள்ளிட்ட தலைசிறந்த படைப்பாளிகளின் படங்களை அங்கே பார்க்க முடிந்தது எங்களுக்குக் கிடைத்த வரம். கிரிஷ் கர்நாட், என்.வி.கே. மூர்த்தி போன்ற சிறந்த இயக்குநர்கள் அங்கே சினிமா சொல்லிக்கொடுத்தார்கள். நான் பயின்ற காலகட்டத்தில் ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹ்லானி போன்றவர்கள் வந்திருக்கிறார்கள்.
அவர்களது படங்களைப் பார்த்து முடித்து அவர்களுடன் விவாதிப்பதும் அவர்களது அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதுமான மிகச் சிறந்த சூழல் அப்போது இருந்தது. தற்போது பாலிடெக்னிக்போல் ஆகிவிட்டது என்கிறார்கள். என்றாலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் இன்னும் அது முன்னணியில்தான் இருக்கிறது.
பூனா திரைப்படக் கல்லூரியில் உங்களுடன் படித்து இன்று பிரபலமாக இருக்கும் சகாக்கள்?
அது மிகப் பெரிய பட்டியல். சுயாதீன சினிமா, ஆவணப்படம், வெகுஜன சினிமா என்று எல்லா மட்டத்திலும் வெற்றிகரமாகப் பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அனைவருமே இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து என்று எடுத்துக்கொண்டால் மலையாளத்தில் தொடர்ந்து உலகத் தரமான படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் சிவபிரசாத், சுகுமாரன் நாயர் ஆகிய இருவரும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவர்கள்.
ஆவணப்படம் எனும் வடிவத்தை நீங்கள் தேர்ந்துகொள்ள என்ன காரணம்?
பிரெஞ்சு ஆவணப்பட மேதை கிரிஸ் மார்க்கர் என் மீது செலுத்திய தாக்கம் என்று சொல்லலாம். இன்ஸ்டிடியூட்டில் கடைசி வருடத்தில் நான் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். அதற்காகப் பல படைப்புகளை இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது கிரிஸ் மார்க்கர் 1963-ல் எடுத்திருந்த ‘லி ஜோ மாய்’ (The Lovely Month of May) என்ற ஆவணப்படத்தைக் கண்டேன்.
மார்க்கர், தனக்கே உரிய தனித்துமான சினிமா மொழியில் பாரிஸ் நகரத்தை பற்றிய மென் கவிதையாக அதை வடித்திருந்தார். அடுத்து அவர், அன்றைய பிரெஞ்சு ஆட்சியாளர் அலண்டே பற்றியும், அவருடைய அரசாங்கம் எப்படி வீழ்ந்தது என்பது பற்றியும் மிக நுட்பமான தொகுப்பாக ‘ஸ்பைரல்’(1976) என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தார். அதில் புரட்சிக் கவிஞன் பாப்லோ நெரூதா, தான் எழுதிய கவிதையை நேரில் வாசிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் படம் உருவாக்கிய தாக்கமும் என்னை ஆவணப்படத்தை நோக்கித் திருப்பியது. கிரிஸ் மார்க்கர் எனக்கு அளித்த தாக்கத்தை நினைவுகூரும் விதமாக நான் தொகுத்து அளித்ததுதான் ‘ஐ.என்.ஏ’ ஆவணப்படம்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் அசலான ஸ்டாக் ஃபுட்டேஜ்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன அல்லவா?
ஆமாம். மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும் பெருவாரியாக ஸ்டாக் புட்டேஜ்களைப் பெற்று அதைத் தொகுத்தேன். அதில் நேதாஜியின் வாழ்க்கையோடு இடம்பெற்றிருக்கும் இந்திய தேசிய ராணுவ வீரர்களின் பேட்டிகளை மட்டுமே நான் எடுத்தேன். நேதாஜியின் ரகசியச் செயலாளர் மேஜர் பாஸ்கரன், கே.ஏ.கே. மேனன் போன்றவர்கள் பழுத்த முதுமையில் இருந்தார்கள்.
நேதாஜியைக் கடைசியாக வழியனுப்பி வைத்தவர் மேஜர் பாஸ்கரன். நேதாஜி விமானம் விபத்தில் இறந்துவிட்டதாக வந்த செய்தியை மறுத்தவர். அவருடைய கணிப்பில் விபத்துக்குள்ளான விமானம் நேதாஜி சென்ற விமானம் அல்ல என்று எனக்குப் பேட்டியளித்தார். நேதாஜிக்கு நெருக்கமான அவரது சமகாலத்தைச் சேர்ந்த இதுபோன்ற பல ஆளுமைகளின் பேட்டிகளைப் சரியான நேரத்தில் செய்த பதிவாக அதை நினைக்கிறேன்.
தற்போது தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஆவணப்பட முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கடந்த 12 ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டில் இல்லை. போவதும் வருவதுமாக இருக்கிறேன். ஆனால், தமிழில் தற்போது இயங்கும் ஆவணப்பட இயக்குநர்களின் முயற்சிகளும் வெளியாகும் ஆவணப்படங்களும் எனக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளன. டிஜிட்டல் யுகம் படப்பிடிப்பு வசதிகளை எளிதாக்கியிருக்கிறது. சமூக வலை மூலம் உலகெங்கும் இயங்கிவரும் ஆவணப்பட இயக்குநர்கள், பார்வையாளர்கள் ஆகியோருடன் இணைவதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராக நமது பதிவுகளைக் கொண்டுவர ஆவணப்படமே மிகச் சிறந்த ஊடகம் என்று நம்புகிறேன். அதையே இன்றைய துடிப்பான இளைஞர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
தற்போது பெற்றிருக்கும் லெனின் விருது?
மிக முக்கியமான அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். சுயாதீனப் படைப்பாளிகளைத் தொடர்ந்து இயக்கும் ஆற்றல் இது போன்ற விருதுகளுக்கு இருக்கிறது. முக்கிய தமிழ்ப் படைப்பாளியான எடிட்டர் லெனின் பெயரால் இதை எனக்கு வழங்கிய தமிழ் ஸ்டூடியோ அமைப்புக்கும், விருதைத் தன் கரங்களால் எனக்கு அளித்த மூத்த படைப்பாளி அடூருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.